முத்தின காய்

 

விடியற்காலை மணி நான்கு மணிக்கு அவள் எழுந்து வீட்டு வாசலைப்  பெருக்கிக் கோலம் போட்டுவிட்டு கிணற்றடிக்குச் சென்று அன்றைக்குத் தேவையான தண்ணீரை எடுத்து வைக்கும் முன் சாமான்களை எல்லாம் சுத்தப்படுத்தி நீர் நிரப்பி வைத்தாள்.  அப்போது மணி ஐந்து ஆகி இருந்தது.  வழக்கம் போல பால்காரன் ஐந்து மணிக்குக் கொண்டு வந்து கொடுக்கவும் இவள் வேலைகளைச் செய்து முடிக்கவும் சரியாக இருக்கும்.

பால் வந்தது ஸ்டவ்வைப் பற்ற வைத்து காப்பியைப் போட்டுக் கொண்டு அவள் தந்தை படுக்கையறைக்குச் சென்று கொடுத்தாள்.  அப்படியே தன் தம்பிக்கும் கொடுத்துவிட்டு தானும் கொஞ்சம் பருகிவிட்டு, காலை உணவு செய்யப் புறப்பட்டாள்.  அவளுடன் கோபியும் கூடச் சென்றான்.  அவளுக்கு பக்கத்துணையாக காய் நறுக்கல் போன்ற சிறு வேலைகளைச் செய்தான் கோபி.

கோபி… உனக்கு எதற்குடா… இந்த வேலை எல்லாம்.  போய் நன்றாய் படி… என் லட்சியத்தைக் காப்பாத்துப்பா… அதுவே போதும்…

அக்கா நீங்க எனக்கும் அப்பாவுக்குமாகவும் படுகிற கஷ்டத்தைப் பார்த்தால்…

தம்பி… எனக்கு அதெல்லாம் இல்லை… என் குறிக்கோள் எல்லாம் நீ டாக்டராக ஆகனும் அவ்வளவு தான்…

அம்மா… உன் லட்சியம் ஞாயம் தான்மா… இருந்தாலும் ஒரு தகப்பன் தன் பெண்ணுக்குக் காலா காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்யலே என்றால் எனக்கு என்னம்மா இருக்கு என்றார் அவள் தந்தை.

அப்பா… நீங்க சொல்ல வர்றது புரியுது… என்னடா இந்தச் சனியன் எப்ப நம்மைவிட்டுப் போகப் போகுதோ என்று வருத்தப் படுகிறீர்களா…

காமு… என்னை என்ன அப்படி சொல்லிட்டே… நாங்கள் உன்னை விட்டுப் பிரிந்து ஒரு வினாடியும் இருக்க மாட்டோம்.  கல்யாணம் பண்ணி வீட்டோடு மாப்பிள்ளையை வைத்துக்களாம் என்று தான் என்றார் தழுதழுத்த குரலில்…

ஆமாம் அக்கா… எனக்கும் அப்படி செய்வதே நல்லதாய் படுது.  எனக்கும் உன்னைப் பார்க்காமல் இந்த உயிர் நிலைக்காதுக்கா…

கோபி… முதல்லே நீ டாக்டராகி என் ஆசையை நிறைவேற்று என்றாள் அன்பான குரலில்…

இந்த பேச்சுக்களுக்கிடையே காலைச் சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும் தயாராகிவிட்டது.  இதற்குள் கோபியும், அவள் தந்தையும் குளித்து முடித்து விட்டனர்.  பிறகு காமுவும் குளித்துவிட்டு டிரஸ் பண்ணிக் கொண்டு சிற்றுண்டி உண்ண வரும்போது காலை மணி 8.30 ஆகிவிட்டது.  பரபரப்புடன் உண்டு விட்டு மதியத்திற்கு டிபன் கேரியரில் சாதம் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.   கோபியின் காலேஜ்க்குப் போகும் வழியிலே காமு வேலை செய்யும் அலுவலகம் இருப்பதால் அவன் சைக்கிளில் கொண்டு சென்று விட்டுவிட்டும், வரும்போது ஏற்றிக் கொண்டும் வருவான்.

நாட்கள் பல கடந்தன.  கோபி டாக்டர் படிப்பும் முடித்துவிட்டான்.  அவன் தன் வீட்டின் முன்புறத்தில் ஒரு டிஸ்பன்சரியை எழுப்பிக் கொண்டு தொழிலில் முன்னேறிக் கொண்டு இருந்தான்.  இரவு வந்தது.

அக்கா…

என்ன கோபி… என்ன வேணும்…

உன் மேலே எனக்குக் கோபம்  என்றான் பொய்க் கோபத்துடன்…

என்னடா … சொல்லுற…

பின்ன என்னக்கா…  நான் டாக்டராகி ஒரு வருடம் ஆகப் போகுது… இன்னும்… என்று கோபி முடிக்கு முன்…

ஆமாம்மா… கோபி சொல்லுறதை நான் எப்படி உன்னிடம் சொல்லுவது என்று தயங்கினேன்… என்னம்மா சொல்லுறே…

அப்பா… எனக்கு எதற்குக் கல்யாணம்… காலம் எல்லாம்…

கன்னியாகவே இருந்திடறேன்… என்கிறாயா?

அக்கா… உங்க ஆசையை நான் நிறைவேத்திட்டேன்… இப்ப எனக்கு ஒரு குறை இல்லாத காத்து வருகிறோம் என்று நீ நினைக்கலாம்.  ஆனால் என் ஆசை இன்னும் நீங்க நிறைவேற்றவில்லை.

என்ன கோபி சொல்லுறே

கல்யாணத்தைத் தான்

காமு… நீ யாரையாவது காதலிக்கறீயா?... சொல்லும்மா…

ஆமாம்பா…

யாரும்மா… அந்த புண்ணியவான்… சொல்லும்மா…

இரண்டு பேருப்பா…

என்னம்மா சொல்லுறே…

ஆமாம்பா… என்மேலே அன்பா, ஆசையா இருக்கும் இரு உள்ளங்கள்… எனக்கு ஒரு நோய்  வந்தது என்றால் தங்களுக்கு வந்ததா நினைக்கும் இரு உள்ளங்கள்.  பாதுகாப்பிற்கு ஒரு தந்தையையும், ஆசைக்கும் அன்புக்கும் உரிய ஒரு தம்பி கோபியையும் காதலிக்கிறேன்…

என்னம்மா… இது…

ஆமாம்பா… இந்த வயதிலே என்னை யாருப்பா மணம் செய்துக்குவாங்க…

ஏன் இல்லை… அதற்கு நான் பொறுப்பு… உங்க சம்மதம் மட்டும் இருந்தால் போதும்…

எனக்கு விருப்பமே இல்லை… இந்த… என்று முடிக்கும் முன்…

ஏன்கா… வயது அதிகமாகிவிட்டது என்று தானே திருமணத்தை வெறுக்கறீங்க…

இல்லை… எவர் என்னை மணம் செய்துக்குவா…

பதினெட்டு வயது அழகியை ஐம்பத்துரெண்டு வயது கிழவன் கட்டிக்கும் போது 28 வயதான உன்னைக் கட்டிக்க யாராவது முன் வராமலா இருப்பார்கள்…

கோபி… அது ஆண்களுக்குத் தாண்டா…

ஏன்கா… ஆண்கள் மட்டும் எவ்வளவு வயது ஆனாலும் இளம் குமரியை மணம் செய்துக்கலாம்… உன்னை என்று மேலே ஏதோ சொல்ல வந்தவன் நிறுத்திக் கொண்டான் கோபி…

அம்மா… காமு… இது ஒண்ணும் அதிக வயது ஆகிவிடலே… கோபி சொல்லறது போல கேளும்மா… எங்க ஆசையில் மண் அள்ளிப் போடாதேம்மா…

அப்பா… உங்களைப் பிரிந்து என்னாலே எப்படிப்பா இருக்க முடியும்.  அது என்னாலே ஒரு காலும் முடியாது…

அக்கா… அந்தக் கவலை உனக்கு வேண்டாம்… கல்யாணத்திற்குச் சம்மதம் கொடுத்தால் போதும்…

சம்மதம் கொடுக்க வரவர் இப்ப அப்படித்தான் சொல்வார்.  பிறகு தகராறு வரும்.  எதுக்கு இதெல்லாம்.  நீ கல்யாணம் பண்ணிக்கோ கோபி அதுவே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் என்றாள் காமு.

காமு… அக்காள் ஒருத்தியை கன்னியாக வைத்துக் கொண்டு மகனுக்குத் திருமணம் செய்துட்டான் இவன் என்று ஊரார் என்னை ஏசிப் பேசச் சொல்லுகிறாயா?

அக்கா நீங்க எப்ப கல்யாணம் பண்ணிக்கறீங்களோ… அதற்கு அடுத்த முகூர்த்தத்தில் என் கல்யாணம்.  இதற்குள் நீ என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம்.  சீக்கிரமா யோசிச்சு காலையிலே நல்ல முடிவா சொல்லுக்கா…

காலையில் காமுவின் சம்மதம் பெற்று கோபி மாப்பிள்ளைக்கு எங்கு எங்கோ அலைந்து கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்யிக்கு அலைந்த கதையாக மாறியது.

ஆமாம். கோபியின் நண்பன் சோமு.  அவனும் ஒரு டாக்டர்.  அவள் ஓர் சீர்திருத்தவாதி.  தாய், தந்தையரை இழந்தவன்.  இப்போது அநாதையாக இருப்பவன்.  28 வயது ஆனவன்.  ஆருயிர் நண்பன்.

அக்கா உங்கள் கணவன் சம்மதம் தந்துவிட்டார்.

என்னடா… சொல்லுறே… என்றார் அவர் தந்தை…

ஆமாம்பா… அக்காவை கல்யாணம் பண்ணிக்க என் நண்பன் ஒருவன் சம்மதித்து விட்டான்.

ஆமாம்… என்னக்கா… மௌனமா இருக்கிறாய்… அவர் எப்படிப்பட்டவர் என்றா… உனக்குக் கூட அவனைத் தெரியுமே… சோமு… என்றான் கோபி…

அடடே… சோமுவா… நல்ல பையனாச்சே…

என்னக்கா… சம்மதமா?...

அவளை ஏண்டா கேட்கிறாய்… போய் முகூர்த்தத் தேதியைக் குறிக்க ஐய்யரை அழைத்து வாடா…

திருமணம் குறிப்பிட்ட நாளில், வைத்த நேரத்தில் சிறப்பாக ஊரார் முன்னிலையில் முடிந்தது.

இரவு வந்தது. படுக்கை அறைக்குக் காமுவை அனுப்பி வைத்தார்கள்.  அதற்கு முன் சோமு அங்குக் காத்து இருந்தான்.

இவளுக்கு வயது ஆகிவிட்டது.  யார் சொன்னது இந்த இளம் பூங்கொடி, ரோஜாப் பூவையா வயது ஆனது என்பார்கள்.  இல்லை முன்னை விட இப்பொழுது அவள் பத்து வயது குறைந்தே காணப்பட்டாள்.

மெல்லிய இடையாள், மீன் விழியாள், ஆற்றோடை போன்ற அகல நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டும், தலைமுடி நிறைய அறையின் மானத்தைக் காக்க மணம் மிக்க மல்லிகைப் பூவைச் சவுரி முடியில் வைத்துக் கொண்டும் வந்த அவள் உடம்பின் மேல் மின் விளக்குகளின் ஒளி கண்ணாடியில் ஒளிர்வது போல அல்லவா மின்னினாள்.  இவள் இருபத்து எட்டு வயது மங்கை அல்ல பதினெட்டு வயது இளநங்கை என்று நினைத்து காமு என்றான்… மெல்ல அவளை இழுத்துக் கொண்டேன்.

என்னைத் தொடாதீங்க… என்றாள்.

திடுக்கிட்டு தன் கையை மின்சாரத்தில் வைத்தவன் போல இழுத்துக் கொண்டான்.

நீங்க உண்மையாக என்னை மனப்பூர்வமாக கல்யாணம் பண்ணிக்கலே என்று நான் நினைக்கிறேன்…

சோமுவின் வற்புறுத்தலில் நான் சம்மதித்தேன் என்று நினைக்கிறாயா?  இல்லை காமு... இல்லை.. என்றான் சோமு…

இதைக் கேட்ட அவள் அவனை உற்று நோக்கினாள்…

நான் உன்னை மனப்பூர்வமாக காதலித்தேன்… அது இதுவரை ஒருதலைக்காதலாக என் பொருட்டு இருந்தது.  கோபி என்னை வந்து கேட்டதும் நான் மறுப்பேனா?  சம்மதம் தந்தேன்.  நீ நினைக்கலாம் வயது வேறுபாட்டை.  நான் விரும்பவில்லை அதைப் பற்றி நமக்கு இடையே தூய அன்பும், பாசமும் இருந்தால் நம் வாழ்க்கை நலமோடு இருக்கும்.  நீ என்னை நம்ப மாட்டாய், உன்னைப் பார்த்ததில் இருந்து என்னோட காதலியின் கனவுகளை, ஆசைகளை எல்லாம் இதோ கதை, கதையாக எழுதி  இருக்கிறேன்.   படித்துப் பார்த்து உன் மனம் போல் செய் என்றான் சோமு…

அத்தான் என்னை மன்னிச்சிடுங்க… உங்க மனசு தெரியாம நடந்துக்கிட்டேன்… திருமணம் செய்துக்க வயது ஒரு வரம்பு இல்லை.  அவர்கள் தூய உள்ளங்கள் இருந்தாலே போதும் என்று தெரிந்துக்  கொண்டேன்.  என்னை மன்னியுங்கள் என்று  சோமுவின் அன்புக் கரங்களில் தவழ்ந்தாள் காமு.

Comments

Popular posts from this blog

யார் தவறு?

சென்றதோர் கற்றதோர்