இரு உள்ளங்கள்

             கடிதத்தைக் கண்டதும் உடனே புறப்பட்டுச் சென்றான் ராமு. 

அங்கு ஒரு பேரதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.  தந்தை அவனைத் தட்டி என்னடா பதிலைக் காணோம் என்ற போதுதான் அவனுக்கு நினைவு வந்தது.

என்னப்பா… என்ன கேட்டீங்க… என்றான் ராமு.

உன் திருமணத்தைப் பற்றி… என்றார் தந்தை.

எனக்கு… இப்ப எதற்குப்பா…  என்று வாயில் வந்த எச்சிலை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் குழறினான்.

என்னடா… பைத்தியக்காரன் போல உலருரே… உனக்கோ வயது ஆகுது.  உனக்குக் காலா காலத்திலே ஒரு கல்யாணத்தைப் பண்ணிட்டா என் கடன் தீரும்.

இருந்தாலும்… என்று இழுத்தான்.  என்றாலும், அவனுக்குள் ஒரு குழப்பம்.  அவன் காதலிக்கும் கமலாவை மணம் செய்து வைப்பாரோ? இல்லை. அவர் யாரையாவது பார்த்து வைத்து இருக்கிறாரோ? என்று நினைத்தவன் மூளைக்கு ஓர் அதிர்ச்சி.

ராமு… நான் உனக்குச் செல்வராஜோட மகளைத்தான் கட்டனும் என்று முடிவு பண்ணிட்டேன்.  ஊருக்குப் போவதற்கு முன்னாலே நல்ல முடிவைச் சொல்லு என்று உறுதியுடன் கர்ஜித்து விட்டுச் சென்றார் தந்தை.

ஊரில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அந்த அர்த்த ராத்திரியில் ராமுக்கு மட்டும் தூக்கம் வந்த பாடு இல்லை.  அவன் முகத்தில் ஏனோ சோகம்  எழில் கொண்டு   இருந்தது.

காந்த விழியாள், அழகுச் சோலையாள், அவளை மறந்துவிட்டு மற்றவளைக் கல்யாணம் செய்துக் கொள்வதா?  இது நான் அவளுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?  அப்பாவின் ஆசையை நிறைவேற்றவில்லை என்றால் வள்ளுவனின் குறளைப் படித்த எனக்கு எவ்வளவு இழுக்கு.  தமிழுக்குத் தான் என்ன கொடுமை என்று சிந்தித்தவன் ’ஏதோ ஒரு முடிவு எடுத்தவன் போல கண்ணயர்ந்துத் தூங்கிவிட்டான்.

பொழுது விடிந்ததும் அப்பா உங்க விருப்பப்படியே செய்யுங்க என்று கூறிவிட்டு ஊருக்குச் சென்றான்.  அங்குக் கமலாவைச் சந்தித்துத் தனக்கு நேர்ந்ததைச் சொல்ல விரைந்தான்.

ஆனால் அங்குக் கமலாவைக் காணவில்லை.  அவள் வீட்டைக் காலி செய்துவிட்டாள் என்று கேள்விப்பட்டதும் நிலைகுலைந்து நின்றுவிட்டான்.  கமலாவிற்குப் பதிலாக அவளுடைய ஒரு கடிதம் இருந்தது.  அதில்,

நம் காதல் அறிந்த என் தந்தை என் வேலையை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, யாருக்கோ மணம் முடிக்கப் போவதாக பலாத்காரமாக சொன்னார்.  பயத்தில் நான் அவர் விருப்பப்படியே செய்து விட்டேன். 

இப்படிக்கு

உள்ளத்தில் நிறைவுடன் இருந்த

கமலா

ஐயோ… கமலா… உனக்கும் இந்தக் கதிதானா?  ஏன்? நாம் காதலித்தோம்.  இப்படி ஓர் துன்பத்தை அளித்து சந்தோஷம் இல்லாத வாழ்க்கை வாழவா?.... பிறந்தோம்.  நான் அன்று உன்னை… பழைய நினைவுகளில் தன் மனதை அலையவிட்டான் ராமு.

கடற்கரை… மாலை வேளை… இதமான காற்று சில் என்று வீசிக் கொண்டு இருந்தது.    அந்த வேளையில் தனியாக ஓர் இளம்  பெண் ஒருத்தி உலாவிக் கொண்டு இருந்தாள்.  அவளிடம் இருந்த மணிப்பர்சை ஒருவன் திருடிக் கொண்டு ஓடவே அவள் கூச்சலிட்டாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த நான் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்து பர்சை அவளிடம் கொடுத்தேன்.  அன்று தான் நானும் அவளும் சந்தித்த முதல் நாள்.

பிறகு… நான் வேறொரு கம்பெனிக்கு மானேஜராக மாற்றவே மீண்டும் எங்கள் இரண்டாவது சந்திப்பு நடந்தது.  அவள் அந்தக் கம்பெனியில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவனும் அவளும் பலமுறை சந்தித்தார்கள்.  இதனால் இவர்களின் உள்ளத்தில் காதல் ஊற்றுப் பெருக்கெடுத்து ஆறாக ஓடிக் கொண்டிருப்பது கடலில் கலக்கும் முன் இப்படி எல்லாம் வரும் என்று யார் கண்டார்கள்…

நாட்கள் பல கடந்தன.  தந்தையிடமிருந்து கடிதம் வரவே ஊருக்குப் புறப்பட்டான்.  அங்கு அவன் கண்ட காட்சி அவனையே மெய்மறக்கச் செய்தது.

ஆமாம்… அங்குக் கமலா நின்றுக் கொண்டு இருந்தாள்.  அதே நிலையில் கமலாவும் நின்றாள்.

கமலாவையும், ராமுவையும் பார்த்த பெரியவர்கள், பயந்தே போய்விட்டார்கள்.   நிலைமையைச் சமாளித்துக் கொண்டு ராமு உள்ளே சென்றான்.

என்னம்மா… மாப்பிள்ளை பிடித்திருக்கா என்று அவள் தந்தை கேட்டார்.

அவனைக் கண்டது முதல் தன்னையே மறந்த கமலா அப்பா கேட்டதற்கு…

ஒன்றும் இல்லை அப்பா… என்றாள்.

என்னம்மா நான் கேட்டது என்ன? நீ சொல்வது என்ன? என்று கேட்டார் அவள் தந்தை.

என்னப்பா… சொன்னீங்க… என்றாள்.

மண்ணாங்கட்டி… மாப்பிள்ளை…  என்று கேட்டார். 

அதற்குக் கமலா அமைதியுடன் வெட்கித் தலைகுனிந்தாள்…

கமலா நம்ம வீட்டிலே இருக்கிறாள்.  இது கமலா தானா இல்லை… என்று நினைத்துக் கொண்டிருந்தவன் தந்தையின் அழைப்பு வரவே கூடத்துக்குச் சென்றான்.

என்னப்பா என்றவன்  மீண்டும் கமலாவைப் பார்த்தான்.  அவள் கண்கள் இரண்டும் வச்சகுறி மாறாது ராமுவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.  இவன் அவளைப் பார்த்ததும் அவள் தலைகுனிந்துக் கொண்டாள்.

இவதாண்டா நான் பார்த்த செல்வராஜ் மகள்… பெயர் கமலா… என்றதும்…

கரைக்ட் நான் நினைச்சது சரியாப் போச்சு…

என்னடா… சொல்லுகிறாய்…

அப்பா… நானும் இவளும்… என்று இழுத்தான்…

இதைத் தெரிந்துக் கொண்ட பெற்றோர்கள் அப்படியாம்மா… என்று கமலாவைக் கேட்டார் அவள் தந்தை.

ஆமாம் என்றாள் அவள்.

கல்யாணம் குதூகலமாக நடைபெற்றது.  இரவு வந்தது.  இருவரும் முதல் இரவுக்குச் சென்றனர்.

கமலா என்றான் ராமு.

என்னங்க… என்று மனைவிக்கு உரியவளாகக் கூறினாள் கமலா.

கடவுள் நம்மை எப்படி எல்லாம் சோதிக்கிறான் பார்த்தியா?  என்றான் அவன்.

என்னங்க… என்று எதையோ பேச வந்தவளை இதெல்லாம் பேசவா இங்கு இருக்கோம்.  முதல்லே லைட்ட அணை, நான் உன்னை அணைத்துக்கனும் என்றான் உணர்ச்சி மேலிட…

எப்படித்தான் இத்தனை நாள் இருந்தீங்களோ?

எப்படியா?  இதோ இப்படித் என்று அவளை அள்ளி அரவணைத்து முத்தம் இட்டான்.  அவன் கைக்கு ஒரு தஞ்சாவூர் பொம்மை  மாட்டிக் கொண்டாலே படுகஷ்டம், இவள் என்ன செய்வாள் பேதை.  அவன் மனைவி. இரு உள்ளம் ஓருள்ளமாக, இருள் பரவ அன்புள்ளம் இன்ப மயமானது.

Comments

Popular posts from this blog

துன்பத்தின் எல்லை

உறவும் உள்ளமும்

காலம் இப்படி