யார் தவறு?
அன்று மாலை நான்
பணிபுரியும் ஆபீசை விட்டுவிட்டு வெளிவந்த போது மணி ஐந்து இருக்கும். நேராக நான் குடியிருக்கும் இல்லத்தை நோக்கி நடக்கலானேன். இன்று எப்படிப் பொழுதைப் போக்குவது? சினிமாவிற்குப்
போகலாமா? என்று எண்ணிக் கொண்டு பாக்கெட்டில் கையை விட்டேன், பதினைந்து ரூபாய் இருந்தது.
சரி என்று எண்ணிக் கொண்டு வீடு வந்தேன்.
கிணற்றடியில்
போய் முகம் அலம்பப் புறப்பட்டேன். அங்கே நான்
குடி இருக்கும் வீட்டுக்காரரின் பெண் தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தாள். நான் ஒதுங்கினேன்… ஆனால் அவள்…
என்னங்க…. அங்கே
நின்னீட்டிங்க… நீங்க முகம் அலம்பிக் கொள்ளுங்கள்… என்றாள்.
இதுவரை என்னைப்
பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ளும் அவளா பேசுவது. என்று சந்தேகப்பட்டேன். முகத்தைக் கழுவிக் கொண்டு தலையைச் சீவ ஜன்னல் கதவைத்
திறந்தேன். அங்கே, முத்துப்பல் தெரிய, முந்தாணை
நழுவ நின்றுக் கொண்டு இருந்தாள் அவள். எனக்கே
தலை சுற்றுவது போல் இருந்தது. நான் என்ன பகல்
கனவு கண்டு கொண்டிருக்கிறோனோ? என்று நினைத்தேன்.
அவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு பதிலுக்குச் சிரித்தேன். ஜன்னல் கதவை மூடிக்கொண்டு சினிமாவுக்குப் புறப்பட்டேன்.
படத்தைப் பார்த்துவிட்டு
வீடு திரும்பினேன். சாப்பிட்டுவிட்டு படுக்கப்
போனேன்… தூக்கம் வரவில்லை… எழுந்து எழுது கோலும் ஒரு துண்டுக் காகிதமும் எடுத்தேன். எழுதினேன் எழுத்துக்கள் அல்ல அவை என் எண்ணங்கள்…
அன்புள்ள வசந்திக்கு
அன்புக் காதலன் எழுதுவது. நலம்.
நான் உன்னைக்
கண்டது முதல் மனதில் ஒரு கிளர்ச்சி. அது என்ன
என்று புரியவில்லை? உன் கயல்விழிகளைக் கண்டதும்,
கலக்கம் கொண்டேன்… உன்னுடைய பொன்மேனி மயக்கத்தை உண்டு பண்ணியது. அத்தோடு காதல் மயக்கம் என் மனதில் வேரூன்றியது. என் பதிலை நோக்கும்…
இப்படிக்கு
உன்
அன்புக் காதலன்
எழுதி முடித்தேன். படுத்து உறங்கினேன்.
மறுநாள் காலையில்
எழுந்து பல்துலக்க கிணற்றடிக்குச் சென்றேன்.
அங்கே எனக்காகவே காத்துக் கொண்டு இருப்பவளைப் போல் வசந்தி நின்றுக் கொண்டு இருந்தாள். இரவு எழுதிய கடிதத்தை எடுத்து வரலாம் என்று திரும்பினேன். ஆனால்,
என்னங்க… போறீங்க
என்னைப் பார்த்தால் பிடிக்கவில்லையா?
வசந்தி… அப்படி
ஒண்ணுமில்லே…
சரி. எதற்காக
என்னைப் பார்த்தால் திரும்பிட்டீங்க… நான் என்ன பேயா?...
சே… சே.. அப்படி
ஒண்ணுமில்லே… கலைமகளின் மறு அவதாரமே நீ…
வசந்தி… வசந்தி…
என்று கூப்பிடும் குரல் கேட்டு தண்ணீர்க் குடந்தை இடுப்பில் வைத்துக் கொண்டு…
இந்தாங்க… என்று
என்னிடத்தில் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். அவள்
கை என்மேல் பட்டதும் மயங்கி விழுந்து விடுவது போல் ஒரு நிலை. சமாளித்துக் கொண்டு கிணற்றடியைப் பிடித்துக் கொண்டு
கடிதத்தைப் படித்தேன்… அதில்…
இன்று நானும்
எனது தம்பியும் சினிமாவுக்குப் போகிறோம். உங்களை
எதிர்பார்க்கிறேன்…
எனக்கு என்ன செய்வது
என்று தெரியவில்லை. பாக்கெட்டைப் பார்த்தேன்
பன்னிரண்டு ரூபாய் இருந்தது. சரி என்று அன்று
ஆபிஸில் இருந்து சீக்கிரமே வீடு திரும்பினேன்.
மாலை 5.30க்கு அவளும் அவளது தம்பியும் புறப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்திற்குப் பிறகு நான்
புறப்பட்டேன். வசந்தி எனக்காக காத்துக் கொண்டு
இருப்பவள் போல அங்கு இருந்தாள்…
என்ன வசந்தி இங்கேயே
நின்றுட்டே…
உங்களைத்தான்
பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அதுசரி உங்களிடம்
பத்து ரூபாய் இருந்தால் கொடுங்கள்… நாளைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்…
என்ன வசந்தி பத்து
ரூபாய் தானே நீ கேட்டால் நூறு ரூபாயும் கொடுப்பேனே…
வேண்டாங்க… பத்து
ரூபாய் போதும்…
நான் பாக்கெட்டில்
இருந்து பத்து ரூபாயைக் கொடுத்தேன். அதை அவள்
வாங்கிக் கொண்டு அவள் தம்பியிடம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பினாள்.
எதற்கு வசந்தி
அவனிடம் கொடுத்தாய்?...
ஒரு விஷயத்திற்காகத்தான்
கொடுத்தேன். எனக்குப் புரிந்தது. சினிமாவில்
எங்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று தான் இவள் இப்படி செய்தாள் என்று புரிந்துக்
கொண்டேன்.
படம் ரொம்ப நாள்
ஓடியதால் கூட்டம் இல்லை. அவள் மேல் வகுப்பு
டிக்கெட் வாங்கிக் கொண்டாள்…
என்ன வசந்தி நான்
வாங்கி விடுகிறேன்… என்றேன். ஆனால் பணம் இரண்டு
ரூபாய் தான் இருந்தது.
பரவாயில்லீங்க
… என்றாள்.
நானும் ஒரு மேல்
வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக சேர்ந்து அமர்ந்தோம். படம் ஆரம்பமாகியது. எனக்குப் படம் பார்க்கப் பிடிக்கவில்லை. மெதுவாக கையை அவள் சாய்த்துக் கொண்டிருக்கும் சோபாவின்
மேல் போட்டேன். அதை அவள் கவலை கொல்லாதவள் போல்
இருந்தாள். அவள் பருவங்கள் என்னைப் பைத்தியக்காரனாக்கியது.
அப்போது இடைவேளைக்கான விளக்குப் போட்டார்கள்.
நான் விழித்துக் கொண்டேன். கையை எடுத்துவிட்டேன்.
மீண்டும் படம்
ஆரம்பித்தபோது அவள் என் பக்கத்தில் அமரவில்லை.
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
படம் முடிந்ததும் வீடு திரும்பினேன்.
அப்போது, எனக்கு
ஒரு யோசனை வந்தது. நான் எழுதிய கடிதத்தைக்
கொடுக்கலாமா? என்று தோன்றியது. காலையில் பார்த்துக்
கொள்ளலாம் என்று படுத்துக் கொண்டேன்.
காலையும் வந்தது.
கவலையும் வந்தது. காதல் கடிதத்தை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குச் சென்றேன். வழக்கத்திற்கு மாறாக அவள் தம்பி இருந்தான். நான் திரும்பினேன். ஆனால் அவன் ஓடி வந்து என்னிடத்தில் ஒரு கடிதத்தைக்
கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு உணர்ச்சிகளை
உள்ளடக்கி உள்ளறைக்குச் சென்றேன். கடிதத்தைப்
படித்தேன். தலை சுழன்றது. அப்படியே சாய்ந்து
விட்டேன்… அதில்…
அன்புள்ள அண்ணாவுக்கு வசந்தி எழுதுவது. என்னை நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள்.. நான் உங்களைக்
காதலிப்பதாக எண்ணிக் கொண்டீர்கள். என்னுடைய அப்பா வட்டிக்கடைக்காரர் என்று உங்களுக்குத்
தெரியும். அவரை யாரோ ஆயிரம் ரூபாய் கேட்டார்களாம். அதற்குப் பத்து ரூபாய் குறைகிறது. அதனால் நீங்கள் தரவேண்டிய வீட்டு வாடகையை எப்படி
முன் கூட்டியே கேட்பது என்று என்னை விட்டு
கேட்கச் சொன்னார். ஆதலால் தான் இந்தப் பத்து
ரூபாய் வாங்கியது. வணக்கம்.
இப்படிக்கு
அன்புத்
தங்கை
வசந்தி
Comments
Post a Comment