சிதறல்கள்

 


வேலைவெட்டி இல்லாமல் ஊர்ச்சுற்றித் திரிந்தவனை அவள் கணவனென்று ஏற்றுக் கொண்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.  அவனுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவளுடைய பெற்றோர் அவளை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.  எம்.ஏ., படித்திருந்தாலும் அவனுக்கான வேலை மட்டும் கிடைத்தபாடு இல்லை. வேலை இல்லாததால் அவனுடைய மாமனார் வீட்டில் உரிய மரியாதை அவனுக்குக் கிடைப்பதில்லை.  அதனால், அவன் மாமனார் வீட்டிற்குச் செல்வதை நிறுத்திவிட்டான்.  பெற்றோர்களின் சொத்தும் தந்தையின் வருமானமும் அவர்களுடைய குடும்பத்தில் பஞ்சத்தை விரட்டியடித்திருந்தாலும், ஆணுக்கு அழகு கையிலொரு வேலை.  இருந்தாலும், அவர்களுக்குள் மனக்கசப்பு ஏதும் இல்லை.  தனக்கென உரிய வருமானம் இல்லாத காரணத்தால் தனக்கொரு குழந்தை வேண்டாம் என்று சொன்னபோது அவனது மனைவி அதற்கு ஒப்புதல் தந்து உள்ளத்தோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

படித்த மகனைக் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தாமல், அவனை அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற அவன் தந்தையின் விருப்பத்தால், குடும்பத் தொழிலையும் அவனால் தெரிந்துக்கொள்ளவில்லை. 

தன்னையும் ஒருவனாக எல்லோரும் உலகம் போற்ற வேண்டும். உலகில் சிறந்த பலரில் தானும் ஒருவனாக இருக்க வேண்டும்.  ஏசியோர், ஏசிவோர் எல்லாம் புகழ வேண்டும்.  தான் மற்றவர்களிடம் கையேந்தி வாழ்வதைவிட, தன்னால் மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ வேண்டும்.

எண்ணங்கள் உயரியதாக இருந்தாலும் உரிய வழி தெரியாமல் இருந்தான் அவன்.  அவனுடன் பள்ளியில், கல்லூரியில் படித்த நண்பர்கள் பெரும்பாலோர் ஏதோவொரு வேலையில் பணம் சம்பாதித்துக் கொண்டு இருந்தார்கள்.  அவர்களுக்கும் உரிய காலத்தில் உரியவளை மணந்து இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாக வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களை விட இவன் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தான்.  அப்படி இருந்தும் அவனுக்கு அரசாங்க வேலை மட்டும் கிடைக்கவில்லை. 

இப்படியே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.  இனியும் அரசாங்க வேலை என்று எண்ணிப் பார்த்துக் கொண்டு வீணே இருப்பது சரியல்ல என்று எண்ணிய அவன், மாற்று வழியில் தன்னுடைய சிந்தனையைச் செலுத்தத் தொடங்கினான்.

 

இதுவரை படித்ததன் பயனாகக் கிடைத்த அறிவினைக் கொண்டும், வாழ்க்கையில் தான்பட்ட இன்னல்களைக் கொண்டும் தன்னுடைய மனதில் எண்ணியதை எழுத்து வடிவில் வடிப்பது என்று முடிவு எடுத்தான். 

சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரை தான் படித்தவற்றில் தன்னைக் கவர்ந்த இலக்கியப் பகுதிகள் எவையெவை என்று எண்ண பட்டியலிட்டான்.

தானும் ஒரு படைப்பாளியாகலாம் என்று தான் படித்த கதைகளையும் இலக்கியங்களையும் சுவைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் நடந்தவற்றைத் தானே படைப்பாளர்கள் தன்னுடைய படைப்புக்களில் உள்ளீட்டுப் பொருளாகக் படைக்கின்றனர்.  நாமும் முயற்சிக்கலாமே என்று முதலில் ஒரு சிறுகதை எழுதத் துணிந்தான்.

கதையை எழுதிவிடலாம்.  இதைச் சந்தைப்படுத்துவது எப்படி? என்கிற வினா அவன் மனதில் தோன்றியதும், அவனுடைய சிந்தனை அதை நோக்கியதாக இருந்தது. தான் ஒரு கிராமத்தில் இருந்துக்கொண்டு, கதைகளை எவ்வாறு சந்தைப்படுத்துதல் இயலும்?

முடியும் என்ற உணர்வு தோன்ற, இணையத்தினைத் தேர்வு செய்தான்.  முகநூலில் பல நண்பர்களைப் பெற்றான்.  புலனம் என்கிற கட்செவி (Whatsapp)  உருவாக்கி அதன் மூலம் பல நண்பர்களைப் பெற்றான். தன் பெயரில் பிளாகர் ஒன்றை உருவாக்கினான்.  இப்படியாக இணைய நண்பர்கள் மற்றும் குழுக்கள் பலவற்றை உருவாக்கினான். 

சந்தைப்படுத்துதல் வழியைக் கண்டவன், தான் எழுதிய தன்னுடைய முதல் சிறுகதையைப் பிளாகரில் வெளியிட்டு அதனுடைய இணைப்பை முகநூலிலும் புலனத்திலும் பதிவிட்டான். 

ஏராளமான கண்டனங்கள்.  சிறிதளவே பாராட்டுக்கள்.  மனம் தளராமல் இரண்டாவது கதையை எழுதி வெளியிட்டான்.  முதலில் ஏசிய பலர் பாராட்டத் தொடங்கினர்.  இதுவே, தனது வெற்றிக்கான முதல்படி என்று நினைத்தவன்.  இதுதான் தனக்கான இடம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தொடர்ந்து எழுதி வெளியிட்டான்.  கண்டனங்கள் முற்றிலும் நீங்கி, வாசிப்புக்களும் அதற்கேற்பப் பாராட்டுக்களும் குவியத் தொடங்கின.

இதனால் என்ன பயன்? புகழ் கிடைத்தால் புசிக்க முடியுமா? என்கிற நிலையில் அடுத்து அவனுடைய கவனம் சென்றது.  ஒரு கிராமத்தில் இருந்துக்கொண்டே என்னால் இவ்வளவு புகழடைய முடியும் என்றால், சென்னை மாநகரத்திற்குச் சென்றால்… என்கின்ற எண்ணம் மேலோங்கியது.

சென்னை மாநகரத்திற்குச் சென்றான்.  பல பதிப்பகங்களை அணுகினான்.  இணையத்தில் அவனுடைய படைப்புக்கள் வெளிவந்துவிட்டதால், அவற்றை நூலாக வெளியிட யாரும் முன்வரவில்லை. 

அவன் சென்னை சென்ற நேரம்.  சென்னையில் புத்தகக் கண்காட்சி நடந்துக்கொண்டு இருந்தது. அவன் அங்குச் சென்றான்.  அன்று சிறப்புச் சொற்பொழிவாக தலைசிறந்த ஒரு எழுத்தாளர் பேசிக் கொண்டிருந்தார்.  அவருடைய படைப்புக்களை அவன் படித்திருக்கிறான்.  ஆனால் அவருடைய படைப்புக்களில் அவ்வளவாக நல்ல சமுதாயக் கருத்துக்கள் ஏதும் இல்லை என்பதை அவன் உணர்ந்திருந்தான்.  ஆனால், அவரை அந்த மேடையில் இருந்தவர்கள் வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருந்தனர். 

அப்பொழுது அவனுக்குப் புரிந்தது.  படைப்பை விட பரிந்துரை முக்கியம் என்பது.  தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பனை அந்தப் புத்தகக் கண்காட்சியில் கண்டான்.  அவன் திரைத் துறையில் செல்வாக்கு மிக்கவனாக வளர்ந்திருந்தான்.  தன்னுடைய நண்பனின் செல்வாக்கினைப் பயன்படுத்தி ஒரு திரைப்படத்திற்குக் கதை-வசனம் எழுதப் புனைபெயரில் ஒப்பந்தம் ஆனான்.

திரைப்படம் வெளியானது.  கதையும் வசனமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  கை நிறைய பணம்.  சொகுசு வாழ்க்கை வாழத்தக்க வசதி. அப்படி இருந்தும் சாதாரண வாழ்க்கை வாழவே அவன் தேர்ந்தெடுத்தான்.  புகழின் உச்சத்திற்குச் சென்றான்.  மாநில, மத்திய அரசுகளின் விருதுகள் அவனைத் தஞ்சம் அடைந்தன.  பல பத்திரிகைகள் அவனுடைய பேட்டிக்காகக் காத்திருந்தன.  இதுவரை யாருக்கும் பேட்டியே அளிக்காதவன் அன்று ஒப்புக்கொண்டான்.

“புகழின் உச்சத்தில் இருந்தாலும், பணத்திற்குக் குறைவு இல்லை என்றாலும் உங்களின் வாழ்க்கையை சாதாரணமானதாக அமைத்துக் கொண்டது ஏன்?” என்று ஒரு பத்திரையாளர் கேட்டார்.

“என்னுடைய வாழ்க்கை இந்தக் குடிசையில்தான் தொடங்கியது.  தொடங்கியதைத் தொடர்பவனே, வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பதை இந்தக் குடிசைதான் எனக்கு உணர்த்தியது.  என்னுடைய எழுத்துக்கள் இந்தக் குடிசைக்குள் இருந்தே முகிழ்கின்றன” என்று கூறியதும் அவனது கண்களின் ஓரத்தில் நீர்த்துளிகள் சிதறின.

Comments

Popular posts from this blog

துன்பத்தின் எல்லை

உறவும் உள்ளமும்

காலம் இப்படி