சிதறல்கள்
வேலைவெட்டி இல்லாமல் ஊர்ச்சுற்றித் திரிந்தவனை அவள் கணவனென்று ஏற்றுக் கொண்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அவனுக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவளுடைய பெற்றோர் அவளை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். எம்.ஏ., படித்திருந்தாலும் அவனுக்கான வேலை மட்டும் கிடைத்தபாடு இல்லை. வேலை இல்லாததால் அவனுடைய மாமனார் வீட்டில் உரிய மரியாதை அவனுக்குக் கிடைப்பதில்லை. அதனால், அவன் மாமனார் வீட்டிற்குச் செல்வதை நிறுத்திவிட்டான். பெற்றோர்களின் சொத்தும் தந்தையின் வருமானமும் அவர்களுடைய குடும்பத்தில் பஞ்சத்தை விரட்டியடித்திருந்தாலும், ஆணுக்கு அழகு கையிலொரு வேலை. இருந்தாலும், அவர்களுக்குள் மனக்கசப்பு ஏதும் இல்லை. தனக்கென உரிய வருமானம் இல்லாத காரணத்தால் தனக்கொரு குழந்தை வேண்டாம் என்று சொன்னபோது அவனது மனைவி அதற்கு ஒப்புதல் தந்து உள்ளத்தோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். படித்த மகனைக் குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தாமல், அவனை அரசாங்க வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற அவன் தந்தையின் விருப்பத்தால், குடும்பத் தொழிலையும் அவனால் தெரிந்துக்கொள்ளவில்லை. ...